
எனக்கு 5 வயது. கிராமத்துப் பள்ளியில் 2ம் வகுப்பு போகத் தொடங்கியிருந்தேன். அப்படியொன்றும் சேட்டை செய்யவில்லை. அவர் காலத்து குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தாரா? என்று தெரியவில்லை. நான் சேட்டைக்காரன் என்று முடிவு செய்து, பக்கத்து கிராமத்தில் இருக்கும் பெரியம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார் அப்பா. எங்க ஊர் முத்தையா வாத்தியார் தான் அந்த ஊர் பள்ளிக்கு தலைமை ஆசிரியர். அவரும் எங்கள் ஊர் பள்ளியின் த.ஆ.ரும் அப்பாவுக்கு நண்பர்கள். அதனால், ‘கொஞ்ச நாள் பையன் அங்கு படிக்கட்டும்’னு சொல்லி, டி.சி.யும் வாங்காமல், அட்மினும் போடாமல் என்னை நாடு கடத்திவிட்டார்கள். கூட்டுச் சதி.
நான் அங்கு பள்ளி போக வேண்டுமாம். இங்கு எனக்கு அட்டென்டென்ஸ் போடுவார்களாம். நான் அங்கு பரீட்சை எழுதினால், பேப்பரையே பார்க்காமல் இங்கு என்னை பாஸ் செய்வார்கள்.
இதைப் பற்றி எல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. கவலைப்படவும் இல்லை. சோளக்கஞ்சி, கம்மங்கூழு எதையாவது மோரில் கரைத்துக் கொடுப்பார் பெரியம்மா. குடித்துவிட்டு பள்ளிக்குப் போவேன். அங்கு எனக்கொரு நண்பன். பெயர் அழகு. என் வயதிலேயே அவன் எல்லா விவசாய வேலைகளையும் கொஞ்சம் கற்றிருந்தான். கூடவே நிறைய கெட்ட வார்த்தைகளும்.
நான் அவனோடு வயக்காடு, செவக்காடு எல்லாத் திக்கும் போவேன். ஆனால் அவனிடமிருந்து கெட்ட வார்த்தைகளை மட்டும் கற்றுக் கொண்டேன்.
ஒரு நாள் காலை. அது, அப்பா எனக்கு புதிய வாட்டர் கேன் வாங்கித் தந்ததற்கு மறுநாளாக இருக்க வேண்டும். ஏனென்றால் எந்தப் பொருளையும் ஒருநாளைக்கு மேல் தொலைக்காமல் வைத்திருந்ததாக நினைவு இல்லை. தண்ணீரை காலி செய்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த என்னிடம், ஒரு பையன் தண்ணி கேட்டான்.
இல்லை என்று சொல்ல மனமில்லை. மூடியை கழற்றினேன். எப்போதும் திறந்தே இருக்கும் கால்ச்சட்டை பட்டன் வழியாக ’குஞ்சை’ வெளியே எடுத்து மூடியில் ’ஒன்றுக்கு’ இருந்தேன். அவனுக்கு குடிக்கக் கொடுத்தேன். கொஞ்சம் கூட சிரிக்கவில்லை நான்.
இடையில் புகுந்த ஒரு வில்லன், "டேய் அவன் மோத்திரத்தை தாரான்டா" என்று சொல்லிவிட்டு, டீச்சரிடமும் ஓடிப்போய் பற்ற வைத்தான். "இங்க வா... நாயே..." என்று பல்லைக் கடித்தபடி அழைத்தார் டீச்சர். "நான் அப்படிச் செய்யவே இல்லை" என்று பொய் சொல்ல ஆயத்தமானேன். என் முழி காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். விசாரிக்காமலேயே அடி நொறுக்கிவிட்டார் டீச்சர்.
அழுது கொண்டும், மூக்கை உறிஞ்சிக் கொண்டும் உட்கார்ந்திருந்தேன். போஸ்ட் மேன் கொண்டுவந்து கொடுத்த கடிதத்தை டீச்சர் படித்துக் கொண்டிருந்தார். என் அருகே அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டும், டீச்சரிடம் போட்டுக் கொடுத்த பையனைப் பற்றி கோல் சொல்லிக் கொண்டும் இருந்தார்கள் சக பொடியன்கள். அவர்களிடம் என் வீரத்தை காட்டும் விதமாக, "தேவடியா செருக்கி... என்னைய அடிச்சிட்டு லட்டர் படிக்கா பாரு. லட்டரு..." என்றேன் விம்மியபடி.
அந்தப் பயபுள்ள.. அதையும் அப்படியே போட்டுக் கொடுத்துவிட்டான். "இன்னைக்கு நான் செத்தேன்"னு முடிவாயிடுச்சி. எனக்கு என்ன தண்டனைனு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மற்றவர்கள் இருந்தார்கள். ஆனால் டீச்சரோ சேரில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
பீதியோடிருந்த நான் மணியடித்ததும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினேன். டீச்சர் நேராக என் பெரியம்மா வீட்டுக்கு போயிருக்கிறார். நடந்ததைச் சொல்லி அழுதிருக்கிறார். அந்தத் தகவல் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி ஒன்றும் எனக்கு அறிவு கிடையாது என்றாலும், அந்த ஊரைவிட்டே வெளியேறி ஒன்றரை கி.மீ. தொலைவில் இருக்கும் என் ஊருக்குப் போய்விட்டேன். நடந்த சம்பவமும், எதற்காக ஊருக்கு போகிறேன் என்பதும் எனக்கு வழியிலேயே மறந்துவிட்டது. வீட்டுக்கு வந்த என்னிடம் அப்பா, அம்மா விசாரித்ததாகவும் நினைவு இல்லை.
இதற்கிடையே, என்னைத் தேடி சைக்கிளில் ஊருக்கே வந்துவிட்டார் பெரியப்பா. அவர் சொல்லித் தான் வீட்டில் எல்லோருக்கும் விஷயம் தெரியும். எல்லோரும் கூடிச் சிரித்தார்கள்.
எங்க கோயில் பூசாரியை நாய் கடித்த போது, "ஏல.. நம்ம கோயில் பூசாரியை நாய் சவச்சி துப்பிருச்சி தெரியுமா?" என்று மிகைப்படுத்திச் சொல்வது அப்பாவின் இயற்கை குணம். அதனால், "என் மவன் டீச்சருக்கு ஒண்ணுக்கு இருந்து கொடுத்துட்டு ஊரைவிட்டு ஓடியாந்துட்டான்" என்று சொல்லி பெருமைப்பட்டார்.
அதுவரையில் 'கிடையில் (பாயில்) மோளுறவன்' என்றிருந்த என் பெயர், 'டீச்சருக்கு மோண்டு கொடுத்தவன்' என்று உருமாறியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக